Saturday, July 29, 2023

பகவத் கீதை - 2.62 - ஆசையும், கோபமும்

 பகவத் கீதை - 2.62 - ஆசையும், கோபமும் 


ध्यायतो विषयान्पुंसः सङ्गस्तेषूपजायते।

सङ्गात्सञ्जायते कामः कामात्क्रोधोऽभिजायते॥६२॥


த்⁴யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்க³ஸ்தேஷூபஜாயதே|

ஸங்கா³த்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோ⁴ऽபி⁴ஜாயதே 


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2023/07/262.html


(to continue reading, please click the above link)


த்யாயதோ = சிந்திப்பவர்கள் 

விஷயாந் = இந்த உலகில் 

 

பும்ஸ: = அவர்கள் 

ஸங்க³ஸ்தேஷூபஜாயதே|

ஸங்கா = தொடர்பு, தொடர்பினால், பற்றினால் 

த்ஸு = அவற்றில் 

உஞ்ஜாயதே  = உதிக்கிறது 

காம: = ஆசையினால் 

காமாத் = அந்த ஆசையினால் 

க்ரோதோ = கோபம் 

அபிஜாயதே = வருகிறது  


அடுத்த ஐந்து ஸ்லோகங்களில் மனித மனம் எவ்வாறு சலனப் படுகிறது, அதனால் வரும் சிக்கல்கள் பற்றி விளக்குகிறது. 


மனம் எதை தொடர்ந்து சிந்திக்கிறதோ. அதன் மேல் ஆசை வருகிறது. 

ஆசையில் இருந்து பற்று வருகிறது. 

பற்றில் இருந்து கோபம் வருகிறது. 


நாம் நினைப்போம், கோபம் என்றால் ஏதோ சத்தம் போடுவது, சண்டை போடுவது, சாமான்களை தூக்கி எறிவது, என்றெலாம் நினைப்போம். "எனக்கு கோபமே வராது. நான் யாரையும் அதிர்ந்து கூட பேசுவது கிடையாது" என்று சிலர் நினைக்கலாம். 


கோபம் என்பது வெளியில் செல்ல வேண்டும் என்றில்லை. 


நான் வேற படிப்பு படித்து இருந்தால், பெரிய ஆளாயிருப்பேன். என் பெற்றோர் வேறு எதையோ படிக்க வைத்ததால் என்னால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்று பெற்றோர் மேல் கோபம் வரலாம். 


நல்ல பெண்ணை/கணவனை மணந்து இருந்தால் என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும், இன்னும் சந்தோஷமா இருந்திருப்பேன் என்று வாழக்கை மேல் கோபம் வரலாம். 


பொருள்கள் மற்றும் அனுபவங்களை பற்றி சிந்தித்தால், அதன் மேல் பற்று வரும், பற்று வந்தால் ஆசை வரும், ஆசை வந்தால், அது கிடைக்கவில்லை என்றாலோ, அல்லது கிடைக்க தாமதம் ஆனாலோ கோபம் வரும்.


இது நம் மனதில், புத்தியில் வரும் நிகழும் முதல் சலனம் அல்லது மாற்றம். 


இவை நம் புத்தியை தடுமாறச் செய்துவிடும். 


அர்ஜுஜனுக்கு அரசின் மேல், செல்வத்தின் மேல் ஆசை இல்லை ஆனால் தாத்தா, ஆசிரியர் மேல்பற்று. அந்த பற்று அவனை தன் கடமையை செய்ய விடாமல் தடுக்கிறது. புத்தி தடுமாற்றம் நிகழ்கிறது. தடுமாறிய புத்தியில் இருந்து வரும் முடிவுகள் தடுமாற்றமாகத்தானே இருக்கும். அது எப்படி சரியாக இருக்கும்?




 

Tuesday, July 25, 2023

பகவத் கீதை - 2.61 - நிலையான அறிவு

 பகவத் கீதை - 2.61 - நிலையான அறிவு 


तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः।

वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता॥६१॥


தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:|

வஸே² ஹி யஸ்யேந்த்³ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-61||


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2023/07/261.html


(please click the above link to continue reading)


தாநி = அவர்கள் 


ஸர்வாணி = எல்லோரும் 


ஸம்யம்ய = கட்டு படுத்திய பின் 


யுக்த = இணைந்த பின் 


ஆஸீத = அமர்ந்து 


மத்பர:| = பர என்றால் உயர்ந்த, சிறந்த என்று அர்த்தம். மத் என்றால் நான், என்னில், தன்னுள்.. இதை பின்னால் விரிவாகப் பார்ப்போம். 


வஸே = வசப்படுத்தி 


ஹி = உறுதியாக 


யஸ்யே = அவர்களின் 


இந்த்³ரியாணி = புலன்கள், இந்திரியங்கள் 


தஸ்ய = அவர்கள் 


ப்ரஜ்ஞா = அறிவு, முடிவு, 


ப்ரதிஷ்டி²தா = உறுதியுடன் இருக்கும் 


அறிவில் சிறந்தவர்கள் கூட, புலன்களால் உந்தப்பட்டு தவறான முடிவுகள் எடுத்து விட முடியும் என்று முந்தைய ஸ்லோகத்தில் பார்த்தோம். 


சரி, அப்படி என்றால் என்னதான் செய்வது?


புலன்களை எல்லாம் விட்டு விட முடியுமா?  பசிக்கிறது என்று வயிறு சொல்லும் போது, சாப்பிடாமல் எப்படி இருப்பது?  ஒவ்வொரு புலனும் ஏதேனும் ஒன்றை பற்றுகிறது. அவற்றின் மூலம் நமக்கு இன்பம் கிடைக்கிறது. 


புலன் இன்பத்தை விட்டு விட்டால் பின் வாழ்வது எதற்கு? கீதை எல்லோரையும் சாமியாராகப் போகச் சொல்கிறதா?


இல்லை. 


புலன் இன்பங்களை அனுபவிக்க வேண்டும். ஆனால், அந்த அனுபவம் என்பது அறிவின் கீழ் வர வேண்டும். 


எப்படி என்று சிந்திப்போம். 


இனிப்பு எல்லோருக்கும் பிடிக்கும். அதற்காக எந்நேரமும், பார்க்கும் போதெல்லாம் இனிப்பு சாப்பிட்டுக் கொண்டே இருக்க முடியுமா?  நாக்கு சொல்லும். அதன் பின்னால் போக முடியுமா?  சிந்திக்கிறோம் அல்லவா?  இது நல்லது அல்ல. அளவுக்கு மேல் உண்ணக் கூடாது என்று அந்த புலன்களை கட்டுக்கொள் கொண்டு வருகிறோம் அல்லவா?


நாக்குக்கு சொன்னது தான் மற்ற புலன்களுக்கும். அனுபவம் என்பது அறிவோடு சேர்ந்து நிகழ வேண்டும். 


காமம் வேண்டும்தான். அது நல்லது. சுகமானது. அதற்காக மனம் போனபடி எல்லாம் போனதால் இராவணன் அழிந்தான். அவனிடம் அறிவு இருந்தது. ஆனால், அது புலன்களுக்கு கீழே சென்று விட்டது. 


அது சரிதான், ஆனால் அது எங்கே இந்த ஸ்லோகத்தில் வருகிறது?


 யுக்த ஆஸீத மத்பர:| வஸே


யுக்த என்றால் இணைத்து, சேர்த்து என்று அர்த்தம். யோகம் என்பது இணைப்பது. 


ஆசீத - அமர்ந்து. அதாவது நிதானமாக யோசித்து. 


மத்பர = பர என்றால் உயர்ந்த, சிறந்த. மத் என்றால் தன்னில், என்னில், தனக்குள் 


இங்குதான் சிக்கல் வருகிறது. இங்கே, பொருள் சொல்பவர்கள், "மத்" என்பதை கண்ணன் தனக்குச் சொன்னதாக எடுத்துக் கொண்டு, புலன்களை என்பால் (கண்ணன்) செலுத்தி என்று பொருள் கொள்கிறார்கள்.   இறை பக்தி உள்ளவர்கள் கூட தவறு செய்ய வாய்ப்பு இருக்கிறது. இராவணன் செய்யவில்லையா?


அதை விட, தன்னில் என்பதை நம்மிடம் உள்ள சிறந்த விடயத்தில் செலுத்தி என்று பொருள் கொண்டால் அது நம் அறிவை குறிக்கும். நம்மில் சிறந்தது எது என்றால் நம் அறிவு, நம் ஞானம்தான். சிறந்தது. புலன்களை அறிவோடு இணைத்து செயல்பட வேண்டும் என்பது சரியான பொருளாக இருக்கும். 


யுக்த என்றால் இணைத்து - புலன்களை அறிவோடு இணைக்க வேண்டும். புலன்கள் அறிவின் கட்டுப்பாட்டுகுள் இயங்க வேண்டும். அதுவும் உறுதியான அறிவாக இருக்க வேண்டும். 


பக்தி சார்ந்து பொருள் சொல்வதாக இருந்தால், புலன்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து என்று பொருள் சொல்லலாம். 


உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். 



Monday, July 24, 2023

பகவத் கீதை - 2.60 - இந்திரியங்கள் வழி செல்லும் புத்தி

 பகவத் கீதை - 2.60 - இந்திரியங்கள் வழி செல்லும் புத்தி 


यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः।

इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः


yatato hy api kaunteya puruṣasya vipaścitaḥ

indriyāṇi pramāthīni haranti prasabhaṃ manaḥ


யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்²சித:|

இந்த்³ரியாணி ப்ரமாதீ²நி ஹரந்தி ப்ரஸப⁴ம் மந:


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2023/07/260.html


(pl click the above link to continue reading)


யததோ = கடின விடா முயற்சி 

ஹியபி  = இருந்தாலும் 


 கௌந்தேய = குந்தி மகனே 


புருஷஸ்ய = ஒருவன் 


விபஸ்²சித: = அறிவுள்ள 


இந்த்³ரியாணி = புலன்கள் 


ப்ரமாதீ²நி = அலைகழிக்கப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டு 


ஹரந்தி = கொண்டு செல்லப்படும் 


ப்ரஸப⁴ம் = வலுக்கட்டாயமாக 


மந: = மனம், புத்தி 


நாம் வாழ்வில் பல முடிவுகளை எடுக்கிறோம். அவை அறிவு சார்ந்த முடிவா? உணர்வு சார்ந்த முடிவா என்று எப்படி அறிந்து கொள்வது. 


கோபம் வரும் போது, ஏதேதோ பேசி விடுகிறோம். என்னதான் படித்து, அறிவு இருந்தாலும், அந்த நேரத்தில் புத்தி மந்தமாகிப் போய் விடுகிறது அல்லவா?


உணவு கட்டுப்பாடு வேண்டும். கண்டதையும் தின்னக் கூடாது என்று முடிவு எடுத்து இருப்போம். இருந்தும், ஒரு நல்ல தின் பண்டத்தைக் கண்டால் கை தானே போகிறது அல்லவா?  அறிவு எங்கே போனது?


எல்லாம் படிப்போம். எல்லாம் தெரியும். ஆனால், ஒரு சில நேரத்தில் புலன்கள் நம் புத்தியை தன் பாட்டுக்கு இழுத்துச் சென்று விடும். 


புலன்கள் யானை மாதிரி. புத்தி என்பது அதை கொண்டு செல்லும் யானை பாகன் மாதிரி. பாகன் எப்படித்தான் ஓட்டிச் சென்றாலும், யானைக்கு ஒரு கடையில் சென்று பழத்தை தின்ன வேண்டும் என்று ஆசை வந்து விட்டால், பாகன் என்ன முயன்றாலும் அதை கட்டுப் படுத்த முடியாது. 


நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால், நம் முடிவுகள் எல்லாமே சரியான முடிவுகள் என்று நாம் சொல்ல முடியாது. நம்மை அறியாமல், நம்மையும் மீறி நாம் சில முடிவுகளை எடுத்து விடுகிறோம். 


அப்படி என்றால் என்ன செய்வது?


முதலில், நான் எடுத்த முடிவு சரிதான் என்று சாதிக்கக் கூடாது. நாம் எடுத்த முடிவு உணர்வுகளால் உந்தப்பட்டு, புலன்களால் இழுத்துச் செல்லப்பட்ட முடிவாக இருக்கலாம். அடம் பிடிக்கக் கூடாது. 


இரண்டாவது,  பெரிய முடிவுகளை நம்மைவிட அறிவில் சிறந்தவர்களை கொண்டு சரி பார்த்துக் கொள்ள வேண்டும். பயம், ஆசை, போன்றவற்றால் உந்தப்பட்டு தவறான பாதையில் சென்று விடக் கூடாது. 


இங்கே, அர்ஜுனன் போர் செய்ய மாட்டேன் என்கிறான். அது சரியான முடிவா?  பாசம் என்ற உணர்வுகளால் உந்தப்பட்டு முடிவு எடுக்கிறான். அதன் விளைவுகள் அவனுக்குத் தெரியவில்லை. 


மூன்றாவது, முடிவுகள் எடுக்கும் முன், சில கோட்பாடுகளை சரி செய்து கொள்ள வேண்டும். எதனால், எதற்கு இந்த முடிவை எடுக்கிறோம் என்று. இல்லை என்றால், அறிவு பற்ற ஒரு பிடிமானம் இல்லாமல் போய் விடும். 


உதாரணமாக, அர்ஜுனன் ஏன் போர் செய்ய வேண்டும்?  போர் செய்யாமல் இருக்க ஆயிரம் காரணம் இருக்கிறது. போர் செய்ய என்ன காரணம்?


அவன் ஒரு க்ஷத்ரியன். தர்மத்துக்காக போராட வேண்டியது அவன் கடமை. அந்த கடமை, பொறுப்பு, தர்மம், அறம் என்ற கோட்பாடுகள் இல்லை என்றால், புலன்கள் செல்லும் பக்கம் எல்லாம் போக வேண்டி இருக்கும். 


கண்ணன் இந்த ஸ்லோகத்தில் சொல்கிறான்  "படித்து அறிந்த அறிஞனைக் கூட, புலன்கள் ஒரு கண நேரத்தில் இழுத்துச் சென்று விடும் " என்று. 


சில கொள்கைகளை, சில வரைமுறைகளை வைத்துக் கொண்டு அதன் படி வாழப்  பழக வேண்டும். 


Monday, July 18, 2022

பகவத் கீதை - 2.59 - பற்று விட - பாகம் 3

  

பகவத் கீதை - 2.59 - பற்று விட - பாகம் 3



(இதன் முதல் பாகத்தை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம். 


https://bhagavatgita.blogspot.com/2022/07/259-1.html


https://bhagavatgita.blogspot.com/2022/07/259-2.html

)


இந்த ஸ்லோகத்தில் கீதை மூன்று விடயங்களைக் கூறுகிறது. 


முதலாவது, உலக விடயங்களில் ஒருவன் பற்று அற்று இருந்தால் அவை தானே விலகிப் போய் விடும். 



இரண்டாவது, அப்படியே விலகிப் போனாலும், பழைய வாசனை காரணமாக அவை மீண்டும் வரலாம். 


மூன்றாவது, இறை அனுபவம் நிகழ்ந்தால், அந்தப் பழைய விடயங்கள் மீண்டும் வந்தாலும், அதில் ஒரு சுவை இருக்காது. மனிதன் அவற்றால் ஈர்க்கப் பட மாட்டான்.


இனி முதல் விடயத்துக்கு வருவோம். 


கீதை சொல்கிறது, "உலக விடயங்களில் ஒருவன் பற்று அற்று இருந்தால் அவை தானே விலகிப் போய் விடும். " என்று. 


நாம் ஒன்றின் மேல் பற்றை விட்டுவிட்டால் அது நாளடைவில் நம்மை விட்டுப் போய் விடும். 


சின்ன சின்ன உதாரணங்கள் பார்ப்போம்....



https://bhagavatgita.blogspot.com/2022/07/259-3.html


(Pl click the above link to continue reading)



 


வயதாகி விட்டது. சர்க்கரை மேல் உள்ள ஆசையை விட்டு விடுகிறோம். இனிப்பு பண்டங்கள் வேண்டாம் என்று தள்ளி வைக்கிறோம். 

அப்படி நினைத்தால் என்ன ஆகும்?


சர்க்கரை வாங்க மாட்டோம். ஐஸ் கிரீம் கடைகளுக்கு போக மாட்டோம். இனிப்பு பண்டங்களை வாங்க மாட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக இனிப்பு சம்பந்தப்பட்ட விடயங்கள் நம் வாழ்வில் குறைந்து கொண்டே வந்து ஒரு நிலையில் முற்றும் இல்லாமல் போய் விடும். 


அது இயற்கைதானே. எது வேண்டாம் என்கிறோமோ, அதை ஏன் வைத்துக் கொண்டு இருக்கப் போகிறோம். அது நம்மை விட்டு போய்விடும். 


பிள்ளைகள் மேல் அன்பாக் இல்லாவிட்டால் அவர்கள் நம்மை விட்டுப் போய் விடுவார்கள். 


கணவன் மற்ற பெண்களை பார்க்கிறான் என்று மனைவி வருந்தினால், காரணம் என்ன என்று யோசிக்க வேண்டும். நாம் எதன் மேல் ஆசையை விடுகிறோமோ, அது நம்மை விட்டுப் போய் விடும். 


அது ஒருபுறம் இருக்கட்டும். 


மேலும் கீதை சொல்கிறது, ஆசையை விட்டாச்சு, விடயங்கள் நம்மை விட்டுப் போய் விட்டன. எல்லாம் சரிதான். இருந்தாலும், எப்போதாவது அந்த விடயங்கள் நம்மிடம் வரும் என்றால், பழைய ஆசை காரணமாக நம் மனம் அதை மீண்டும் பற்றிக் கொள்ளும். 


இனிப்பே வேண்டாம் என்று கூறி கடுமையான விரதம் இருப்பவர்கள் முன்னால், ஒரு இலட்டு, ஜிலேபியை வைத்துப் பாருங்கள். நாக்கில் எச்சில் ஊறும். ஒரு நாள்தானே. ஒரு துண்டுதானே என்று உண்டு விடுவார்கள். 


மது அருந்துவதில்லை என்று கடுமையான விரதம் இருப்பார்கள். அலுவலகத்தில் ஏதோ விழா.  நண்பர் ஒரு glaas கொடுக்கிறார். சரி, இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்று குடித்து விடுவார்கள். 


இதற்கு வாசனை என்று பெயர்.  ஒரு பாண்டத்தில் பெருங்காயம் போட்டு வைத்து இருப்போம். பின் ஒரு நாள் அது முற்றும் தீர்ந்து விடும். அந்தப் பாண்டத்தை முகர்ந்து பார்த்தால் பெருங்காய வாசனை அடிக்கும். அதில் இப்போது பெருங்காயம் இல்லை. ஆனால், அதன் வாசனை மட்டும் தங்கி இருக்கிறது. 


அது போல, ஆசை விட்டுப் போய் விட்டாலும், முன்பு அனுபவித்த அனுபவம் காரணமாக அவை மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ளும். 



எல்லாவற்றையும் துறந்து கானகம் போய் தவம் செய்த முனிவர்களை அழகிய பெண்கள் மயக்கியதாக பல கதைகள் படித்து இருக்கிறோம். 


வாசனை விடாது. 


அசை, வாசனை போகவில்லை. அதை அடக்கி வைத்து இருக்கிறோம். என்றேனும் ஒரு நாள் அது மீண்டும் வெளி வரும். 


அது வராமலேயே இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?


அதை விட உயர்ந்த ஒன்றில் ஆசை வந்து விட்டால், அந்த ஆசைகள் போய் விடும். பின் அவை மீண்டும் வந்தாலும், நமக்கு அதன் மேல் ஆசை வராது. 


ஏன் ஒவ்வொன்றாகப் போக வேண்டும்? உலகிலேயே மிக உயர்ந்த ஒன்றின் மேல் பற்று வந்து விட்டால், பின் உலகில் உள்ள அனைத்தின் மேலும் உள்ள பற்றுகள் தானே மறைந்து விடும். 


அதைப் பற்றி விட்டால் பின் உலக விடயங்களில் உள்ள பற்று விட்டுப் போய் விடும். 


அது என்னவோ துறவி, சாமியார் மாதிரி ஆகி விடாதா என்றால் இல்லை. 


நூறு ரூபாய் பெறுவதற்காக ஐந்து ரூபாயை துறப்பவனை துறவி என்றா சொல்லுவோம்?


இறைவனை அடைய இந்த சில்லறை விடயங்களை துறப்பது என்பது துறவே அல்ல. சந்தோஷமான விடயம். 


ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக சர்க்கரையை விட்டுவிட்டால் அதனால் துன்பமா? இன்பமா? 


நோயற்ற, நீண்ட, ஆரோக்கியமான வாழக்கை வேண்டும் என்று எண்ணெய் பலகாரத்தை ஒருவன் வேண்டாம் என்று தள்ளி வைத்தால் அது ஒன்றும் பெரிய தியாகமோ, துறவோ ஆகாது. அதற்காக யாராவது வருந்துவார்களா?


அது போல், இறை அனுபவம் நோக்கி உலக விடயங்களை துறப்பது என்பது பெரிய தியாகமோ துறவோ அல்ல.


நீங்கள் நினைக்கலாம். 


இறைவன் இருக்கிறானா இல்லையா என்றே தெரியாது. எவ்வளவுதான் நம்பினாலும் சந்தேகம் இல்லாமல் இல்லை. ஒரு வேளை இறைவன் இருந்து, நான் அவனிடம் சேராவிட்டால், இந்த உலக இன்பமும் போய், இறை அனுபவமும் கிடைக்காமல் போய் விடலாம் அல்லவா? இருக்கும் போதே எல்லாவற்றையும் அனுபவித்து விட்டால் என்ன? இந்த உலக இன்பமாவது கிடைக்குமே? 


அது ஒரு சரியான சிந்தனை தான். மறுபதற்கு இல்லை. 


இப்படி வைத்துக் கொள்ளுங்களேன்.


இறைவன் என்று கொள்ள வேண்டாம். 


ஏதோ ஒரு உயர்ந்ததை அடைய அதை விட குறைவான ஒன்றை விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். 


உடல் ஆரோக்கியம் என்ற உயரத்தை அடைய கொஞ்சம் தூக்கத்தை விட்டு உடற் பயிற்சி என்று வைத்துக் கொள்ளுங்களேன். 


ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு நல்லதை, உயர்ந்ததை அடைய அதற்கு கீழானதை விடுவது என்று வைத்துக் கொள்ளுங்கள். 


அது உங்களை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டே போகும் அல்லவா. 


அது வரை நல்லது தானே. 


அது ஒரு நாள் இறைவனிடம் உங்களை கொண்டு சேர்க்கலாம்.சேர்க்காமலும் போகலாம். ஆனால், நீங்கள் மிக இனிமையான, உயர்வான, ஆரோக்கியமான திருப்தியான, மகிழ்வான வாழ்வை வாழ்ந்து இருப்பீர்கள். 


அதில் சந்தேகம் இல்லையே. 


ஒவ்வொரு நாளும் சில நல்லவை வந்து சேரும், சில தீயவை விட்டு விலகும். 


அது கீதை காட்டும் வழி. 



Friday, July 15, 2022

பகவத் கீதை - 2.59 - பற்று விட - பாகம் 2

 

பகவத் கீதை - 2.59 - பற்று விட - பாகம் 2



(இதன் முதல் பாகத்தை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம். 


https://bhagavatgita.blogspot.com/2022/07/259-1.html

)


இந்த ஸ்லோகத்தில் கீதை மூன்று விடயங்களைக் கூறுகிறது. 


முதலாவது, உலக விடயங்களில் ஒருவன் பற்று அற்று இருந்தால் அவை தானே விலகிப் போய் விடும். 



இரண்டாவது, அப்படியே விலகிப் போனாலும், பழைய வாசனை காரணமாக அவை மீண்டும் வரலாம். 


மூன்றாவது, இறை அனுபவம் நிகழ்ந்தால், அந்தப் பழைய விடயங்கள் மீண்டும் வந்தாலும், அதில் ஒரு சுவை இருக்காது. மனிதன் அவற்றால் ஈர்க்கப் பட மாட்டான்.


இதில் மூன்றாவதை நேற்று சிந்தித்தோம். ஒன்றை விட வேண்டும் என்றால், அதை விட உயர்ந்த ஒன்றைப் பற்றிக் கொள்ள வேண்டும். 


குழந்தை தெரியாமல் கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தை எடுத்து விளையாடும். அதன் கையில் இருந்து பிடுங்க முடியாது. அது ஒரு புறம் இழுக்க, நாம் மறு புறம் இழுக்க, குழந்தை கையை கீறிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. 


அப்போது  என்ன செய்வோம் "இராஜா, அதைத் தந்தால் நான் உனக்கு சாக்லேட் தருவேன்,புது பொம்மை தருவேன்" என்றதும் குழந்தை கத்தியை கீழே போட்டுவிட்டு "சாக்லேட் தா" என்று கையை நீட்டும். 


அது போல மனம் உலகப் பற்றை விட வேண்டும் என்றால், அதை விட மிகுந்த இன்பம் தரக் கூடிய ஒன்றை பற்றிக் கொள்ள வேண்டும். 


பற்றுக பற்றற்றான் பற்றினை பற்றுக அப்பற்று விடற்கு என்பார் வள்ளுவர். 


உலகப் பற்றை விட வேண்டுமா? பற்றற்றானைப் பற்றிக் கொள் என்கிறார். 


https://bhagavatgita.blogspot.com/2022/07/259-2.html


(pl click the above link to continue reading)


குரங்கு ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு தாவும் போது எப்படிச் செய்யும். இருக்கிற கிளையை விட்டுவிட்டு அடுத்த கிளையை பற்றும். 


இறை அனுபவம் எல்லாம் பெரிய விடயம். எல்லாருக்குமா அது நிகழ்கிறது? நம்மால் அதை புரிந்து கொள்ள முடியாது. 


நமக்கு புரிகிற மாதிரி ஏதாவது இருக்கிறதா? 


இருக்கிறது. 


அழகாய் இருக்க வேண்டும் என்று யார் தான் விரும்ப மாட்டார்கள். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தாங்கள் அழகாய் இருக்க வேண்டும் என்பதில் நிறைய கவனம் செலுத்துவார்கள். தங்கள் அழகுக்கு ஒரு குறை வர விட மாட்டார்கள். 


வயிறு காய்ந்தாலும் முகம் காயக் கூடாது என்று நினைப்பார்கள். 


அழகைக் குறைக்கும்  முதல் படி எது? வயிற்றில் தொப்பை போடுவது, உடம்பு ஊதிப் போவது. 


இருந்தும், எந்தப் பெண்ணாவது பிள்ளைப் பெற்றுக் கொள்ள விரும்பாமல் இருப்பாளா?  எவ்வளவு வலி என்றாலும், எவ்வளவு அழகு குறைந்தாலும், பிள்ளை என்பது பெரிய சுகம், பெருமை அல்லவா? அது கிடைக்கும் என்றால் கொஞ்சம் அழகு போனால் பரவாயில்லை என்று மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளகிறார்கள் அல்லவா?


அது போலத்தான் , இறை அனுபவம் (=பிள்ளை) வந்தால் உலக விடயங்கள் (=அழகு) தானே விட்டுப் போய் விடும்.


இது மூன்றாவதாக உள்ளது.


இனி முதல் விடயத்துக்கு வருவோம். 


நாம் ஒன்றின் மேல் விருப்பம் கொள்ளாவிட்டால் அவை தானே நம்மை விட்டு நீங்கி விடும். 


அது எப்படி?


மேலும் சிந்திப்போம் 

Thursday, July 14, 2022

பகவத் கீதை - 2.59 - பற்று விட - பாகம் 1

பகவத் கீதை - 2.59 - பற்று விட - பாகம் 1 


 विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः।

रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते॥५९॥


விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தே³ஹிந:|

ரஸவர்ஜம் ரஸோऽப்யஸ்ய பரம் த்³ருஷ்ட்வா நிவர்ததே ||2-59||


விஷயா = விஷயங்கள் 

விநிவர்தந்தே = ஈடுபடுவது இல்லை 

நிராஹாரஸ்ய = நிராகரிக்கின்றன 

தே³ஹிந:| = உடம்பை பிரதானமாக நினைப்பவர்கள் 

ரஸவர்ஜம் = சுவையை விடுவது இல்லை 

ரஸோ = சாரம் 


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/07/259-1.html


(pl click the above link to continue reading)



அபி = இருந்தும் 


அஸ்ய = அதன் 


பரம்  = உயர்ந்த, சிறந்த, மேம்பட்ட 


த்³ருஷ்ட்வா = கண்ட பின் 


நிவர்ததே = அது நின்று விடுகிறது 


எதன் மேல் பற்று இல்லையோ, அவை ஒருவனை விட்டு தானே விலகிவிடுகின்றன. இருந்தும், அவற்றின் மேல் உள்ள சுவையினால் மனிதன் அவற்றை விடுவது இல்லை. பரம்பொருளை அனுபவித்தபின் அந்த சுவைகள் தீர்ந்து விடும். 



மிக உயரிய கருத்து. மிக மிக ஆழமான கருத்து. நிதானமாக படிக்க வேண்டிய ஒன்று. 


ஒரு வாய் காப்பி குடிக்கிறோம். மிக சுவையாக இருக்கிறது. நல்ல டிக்காஷன், கட்டியான பால், சுண்டக் காய்ச்சி, அளவான இனிப்பு சேர்த்து, ,சூடாக இருக்கிறது. அந்தக்மெல்லிய கசப்பும், பாலின் சுவையும், சர்க்கரையும் நாக்கில் நர்த்தனமாடும். 


இடையில் ஒரு இலட்டை ஒரு கடி கடிக்கிறோம்.அப்படி ஒரு சுவை. இனிப்பு, நெய், ஏலக்காய் நறுமணம், இடையிடையே கற்கண்டு. அடடா என்ன ஒரு சுவை. இரண்டு மூன்று துண்டுகளை இரசித்து சுவைக்கிறோம். 


அடடா, காப்பி ஆறிக் கொண்டே இருக்கிறதே என்று காப்பியை ஒரு மிடறு குடிக்கிறோம்.  காப்பி கசக்கிறது. அதே காப்பிதான். முதலில் சுவையாக இருந்தது. இப்போது கசக்கிறது. 


ஏன்?


நடுவில் இலட்டு தின்றதால். அதன் தித்திப்பு, காப்பியின் சுவையை மழுங்கடித்து விடுகிறது. 


அதே போல், 


உலக இன்பங்கள் சுவையானவைதான். கணவன், மனைவி, பிள்ளைகள், வீடு, கார், ,சினிமா, சாப்பாடு, இசை, நண்பர்கள், ஊரு சுற்றுவது என்பதெல்லாம் சுகம்தான். 


இதையெல்லாம் விடு என்றால் யார் விடுவார்கள்?


ஆனால்,


இறை அனுபவம் வந்து விட்டால், இந்த உலக சுகம் எல்லாம் ஒரு பொருட்டாகத் தெரியாது. 


உலக இன்பம் = காப்பி

இறை அனுபவம் = இலட்டு


உலக இன்பத்தை ஒன்றும் துறக்க வேண்டாம். இறை அனுபவம் வந்து விட்டால், உலக இன்பம் கொடுத்தாலும் வேண்டாம் என்போம். 



இறை அனுபவம் வந்த பின், "கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து" என்பார் அருணகிரிநாதர். 



பெரும் பைம் புனத்தினுள், சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை

விரும்பும் குமரனை, மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள,

அரும்பும் தனி பரமானந்தம்! தித்தித்தது அறிந்தவன்றோ!

கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அற கைத்ததுவே!



தேன் புளிக்குமா? 


அரும்பும் தனி பரமானந்தம் அறிந்த அன்றோ கரும்பும் துவர்த்து என்றார். 


அதற்குப் பின் கரும்பை, தேனை கொண்டு வந்து தந்தாலும், "சீ சீ இது துவர்க்கும், புளிக்கும்" என்று தள்ளி விடுவோம். 


அதெல்லாம் சரி. அருணகிரிநாதருக்கு அப்படி ஒரு அனுபவம் வந்தது, நமக்கு அப்படி ஒன்றும் இல்லையே. நாம் ஏன் விட வேண்டும் என்ற கேள்வி வரும் அல்லவா?


விடை காண்போம். 




Tuesday, July 12, 2022

பகவத் கீதை - 2.58 - நிலையான அறிவு

பகவத் கீதை - 2.58 - நிலையான அறிவு 


 यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः।

इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता॥५८॥


பாடல் 


யதா³ ஸம்ஹரதே சாயம் கூர்மோऽங்கா³நீவ ஸர்வஸ²:|

இந்த்³ரியாணீந்த்³ரியார்தே²ப்⁴யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-58||



பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/07/258.html


(pl click the above link to continue reading)


யதா = எப்படி  


ஸம்ஹரதே = இழுத்துக் கொள்கிறதோ 


சா = மேலும் 


அயம் = அது 


கூர்மோ = ஆமை 


அங்காநி = அவயங்களை 


இவ = அது போல 


ஸர்வஸ²:|= முழுமையாக 


இந்த்ரியாணீந்த்ரியார்தேப்ய  = புலன்களை 


தஸ்ய  = அவன் 


ப்ரஜ்ஞா = அறிவு 


ப்ரதிஷ்டிதா = நிலை கொண்டது 


எப்படி ஆமை தன் அவயங்களை உள் இழுத்துக் கொள்கிறதோ, அது போல் புலன்களை வெளியே செல்ல விடாமல் எவன் ஒருவன் கட்டுக்குள் கொண்டு வருகிறானோ, அவனுடைய அறிவே நிலையானது 


நமக்கு என்ன வேண்டும் என்று தெரிவதில்லை. தெரியாததால் என்ன நிகழ்கிறது என்றால் எதைப் பார்த்தாலும் அது வேண்டும், இது வேண்டும் என்று மனம் ஆசைப் படுகிறது. கிடைக்கவிட்டால் வருத்தப் படுகிறது. மற்றவனுக்கு கிடைத்து விட்டால் பொறாமைப் படுகிறது. தனக்கு கிடைத்து விட்டால், அது கை விட்டுப் போய் விடுமோ என்று பயப்படுகிறது. 


இத்தனைக்கும் காரணம் என்ன? மனம் புலன் வழியே செல்வதால். 


அந்த வீடு வேண்டும், இந்த கார் வேண்டும், அது போல் ஒருதொலைக் காட்சிப் பெட்டி வேண்டும், அவள் வைத்து இருப்பது மாதிரி நகை வேண்டும், அந்த நடிகை மாதிரி அழகாக இருக்க வேண்டும்..இப்படி புலன் எல்லாவற்றிற்கும் ஆசைப் படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒன்றின் பின்னால் ஓடுகிறது. 


ஓடி ஓடி களைத்து போகிறது. 


வேண்டியதை அடைய அலைகிறது. அது கிடைத்த பின் அடுத்ததற்கு அலைகிறது. 


இந்த ஓட்டம் நிற்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று கீதை கூறுகிறது. 


அறிவு அலை பாயக் கூடாது. 


அறிவு அல்லது மனம் அலைபாயக் கூடாது என்றால், அது புலன்கள் செல்லும் வழியில் செல்லக் கூடாது. 


மனதை கட்டுப் படுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. 


அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், புலன்களை வெளியில் செல்ல விடக் கூடாது. 


ஒரு உதாரணம் பார்ப்போம். 


இப்போது உங்களுக்கு அல்வா சாப்பிட ஆசையாக இருக்கிறதா. நான் கேட்கும் வரை அந்த எண்ணமே இருந்திருக்காது. 


உங்கள் முன்னால், ஒரு தட்டில் கொஞ்சம் அல்வாவை வைத்து விட்டு , அல்வா உண்ண ஆசையா என்றால் ஆம் என்பதுதான் பதிலாக இருக்கும். 


கண் அந்த அல்வாவை பார்க்க விடக் கூடாது. அதற்காக கண்ணை மூடிக் கொண்டே இருக்க முடியுமா? 


அது அல்ல. அல்வா இருக்கும் இடத்துக்கு புலன்களை செல்ல விடக் கூடாது. 


வீட்டில் நிறைய தின் பண்டம் வாங்கி வைத்தால், மனம் அங்கே செல்லும்.  அதைக் கட்டுப் படுத்த ஒரே வழி, தின் பண்டம் வாங்கி வைக்கமால் இருப்பதுதான். 


புலன்களை கட்டுப் படுத்துவது என்றால் அவற்ற்றை கட்டி வைப்பது அல்ல. தேவை இல்லாதவற்றை அவற்றின் முன் கொண்டு செல்லக் கூடாது. அல்லது அவை இருக்கும் இடத்துக்கு புலன்களை கொண்டு செல்லக் கூடாது. 


அப்படி போக விரும்பும் புலன்களை உள் இழுத்துக் கொள்ள வேண்டும். 


மது அருந்த ஆசை வந்தால், கால்கள் கள்ளுக் கடைக்கு இழுத்துச் செல்லும். அப்படி போகும் கால்களை போக விடாமல் நிறுத்த வேண்டும். கள்ளுக் கடையில் உட்கார்ந்து கொண்டு, புலன் அடக்கம் செய்கிறேன் என்றால் நடவாது. 


புலன்களை கட்டுப்படுத்தி விட்டால், அறிவு நிலையாக நிற்கும். 


சலனமற்ற அறிவில் இருந்து தெளிவான காட்சி பிறக்கும்.