Thursday, March 24, 2016

கீதை - 14.19 - குணங்களைக் கடந்து

கீதை - 14.19 - குணங்களைக் கடந்து 


नान्यं गुणेभ्यः कर्तारं यदा द्रष्टानुपश्यति ।
गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं सोऽधिगच्छति ॥१४- १९॥

நாந்யம் கு³ணேப்ய: கர்தாரம் யதா³ த்ரஷ்டாநுபஸ்யதி |
கு³ணேப்யஸ்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோதிக³ச்ச²தி || 14- 19||


ந = இல்லை

அந்யம்= வேறு

குணேப்ய: = குணங்களைத் தவிர

கர்தாரம் = கர்த்தா, செய்பவன்

யதா = எப்போது

த்ரஷ்டா = பார்ப்பவன்

அநுபஸ்யதி = காண்கிறானோ

குணேப்யஸ் = குணங்களைத் தவிர

ச = மேலும்

பரம் = உயர்ந்த

வேத்தி = அறிகிறான்

மத்பாவம் = என்னைப் பற்றி அல்லது என் தன்மையைப் பற்றி

சஹ = அவன்

அதி கச்சதி = அவன் அடைகிறான்


குணங்களைத் தவிர வேறு ஒரு கர்த்தா இல்லை. இதை அறிந்தவன், குணங்களுக்கு மேலே உள்ள பொருளை அறிந்து கொண்டால் , என் தன்மையை அறிவான். 


இந்த உலகம் எதனால் இயங்குகிறது ? 

நாம் தினமும் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும் வரை பல காரியங்களைச் செய்கிறோம். 

எது நம்மை செலுத்துகிறது ?

குணங்கள்.

சாத்வீகம், ரஜோ மற்றும் தமோ குணங்கள் நம்மை செயல்படத் தூண்டுகிறது. நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஏதோ நாம் தான் எல்லா காரியங்களையும் செய்வதாக. 

இல்லை.

ஆழ்ந்து பார்த்தால் புரியும் ...நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் இந்த மூன்று  குணங்களில் ஏதோ ஒன்று காரணமாக இருக்கும். அலுவலகம் போவதாக இருக்கட்டும், படிப்பதாக இருக்கட்டும், தூங்குவதாக இருக்கட்டும்....அனைத்து காரியங்களுக்கும் இந்த மூன்று குணங்களே காரணம்.

எப்போதாவது நேரம் கிடக்கும் போது ஆராய்ந்து பாருங்கள். அந்த ஒரு நாளில் என்னென்ன காரியம் செய்தோம், அதற்கு எந்த குணம் காரணம் என்று. உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

சரி , அப்படி என்றால் நமக்கு இவற்றிலிருந்து விடுதலையே கிடையாதா ? இந்த  குணங்கள் நம்மை போட்டு அங்கும் இங்கும் அலைகழித்துக் கொண்டு இருக்கும்...அவை இழுக்கும் பக்கம் எல்லாம் ஓடுவதுதான் நம் வேலையா ? 

இந்த குணங்களில் இருந்து விடுபட முடியாதா ?

முடியும் என்கிறது கீதை. 

இந்த குணங்களுக்கு மேலே ஒன்று இருக்கிறது. அதை அறிந்து கொண்டால் இந்த குணங்களில் இருந்து விடுபடலாம் ?

அதை எப்படி அறிவது ?

அதையும் இந்த ஸ்லோகத்தில் சொல்கிறது கீதை. 

த்ரஷ்டாநுபஸ்யதி

பார்ப்பவன், காண்கிறானோ.....அப்போது என் தன்மையை அடைகிறான்.

அது என்ன பார்ப்பவன் , காண்கிறானோ ? 

பார்ப்பது எல்லாம் காண்பது ஆகாது. 

"நான்" என்பது இந்த குணங்களால் செயல்படுத்தப் படும் ஒரு கருவி அல்ல என்று காண வேண்டும். 

ஒரு பேருந்தில் , கரடு முரடான ஒரு சாலையில் பயணம் செய்கிறீர்கள். வண்டி தூக்கி தூக்கி போடுகிறது. ஒரு நிமிடம் கூட உங்களை நிம்மதியாக இருக்க விடுவது இல்லை. வலது புறம் சரிகிறது. இடது புறம் சரிகிறது. சடாரென்று நிற்கிறது, வேகத்தடையில் தூக்கிப் போடுகிறது. என்னடா இது, இந்த துன்பத்தில் இருந்து ஒரு விடுதலை இல்லையா என்று நினைப்பீர்கள்.

ஒரு நிறுத்தத்தில் வண்டி நிற்கிறது. வண்டியில் இருந்து நீங்கள் கீழே இறங்கி விடுகிறீர்கள். இனி வண்டி எப்படி போனாலும் உங்களுக்குத் துன்பம் இல்லை. 

நீங்கள் வண்டியோடு சேர்ந்து போகும்போதுதான் இந்தத் துன்பம் எல்லாம். நீங்கள் வேறு வண்டி வேறு என்று ஆகி விட்டால், இந்தத் துன்பம் இல்லை. 

அது போல, இந்த குணங்களால் அலைகழிக்கப்படும் உடலும், அதன் அனுபவங்களும் நீங்கள் என்று நினைத்தால் துன்பம் தான். நான் இவற்றை  எல்லாம்      கடந்தவன் என்று நீங்கள் உணரும் போது , அதைக் "காணும்"போது இந்த குணங்களின் பிடியில் இருந்து விடுபட்டு இறைத் தன்மையை அடைவீர்கள்.

  பச்சை நிற கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தால் பார்ப்பது எல்லாமே பச்சையாகத்தான் தெரியும். அது போல, இந்த குணங்கள் நம்மை இந்த உலகை சரியாக "காண" விடுவது இல்லை.

பெண்ணின் மேல் மோகம் வந்தால், அவளைக் "காணும்" காட்சி வேறு மாதிரியாக இருக்கிறது. பொருள்கள் மேல் ஆசை வரும்போது சுற்றி இருப்பவன் எல்லாம் எதிரியாகத் தெரிகிறான்.

பெட்டியில் ஒரு கோடி ரூபாய் எடுத்துக் கொண்டு போனால், எதிரில் வருபவன் எல்லாம் கள்ளனாகத் தெரிகிறான்.

ஒரு முறை துரியோதனன் துரோணரிடம் சென்று குறை பட்டுக் கொண்டான் "நாங்கள் இருவரும் குருகுலத்தின் பிரதிநிதிகள்தான். இருந்தும், நீங்கள் பாண்டவர்களுக்கு மட்டும் நன்றாகச் சொல்லித் தருகிறீர்கள்...கௌரவர்களான எங்களுக்கு சரியாகவே சொல்லித் தருவது இல்லை, ஏன் " என்று.

துரோணர் சிரித்துக் கொண்டே சொன்னார், "இந்த கேள்விக்கு நாளை விடை தருகிறேன். அதற்குள் நீ ஊருக்குள் போய்  ஊர் மக்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்து வா" என்று அனுப்பினார்.

மறு நாள் துரியோதன் வந்தான்.

துரோணர் கேட்டார் "துரியோதனா, மக்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் ?" என்று.

துரியோதனன் சொன்னான் "குருவே, ஊர் பூராவும் அயோக்கிய பயல்கள். ஒருத்தனையும் நம்ப முடியாது "  என்று.

சரி, நீ அந்த தூணுக்குப் பின்னால் மறைந்து கொள், இப்போது தர்மன் இங்கே வருவான். அவன் என்ன சொல்கிறான் என்று  மறைந்து இருந்து கேள் என்றார்.

சிறிது நேரத்தில் தர்மன் வந்தான்.


என்னப்பா தர்மா, மக்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டார்.

"சுவாமி, மக்கள் எல்லோரும் மிக நல்லவர்கள். எல்லோரும் யோக்கியமாக இருக்கிறார்கள். ஒரு அயோகியனைக் கூட  காணவில்லை " என்றான்.

துரோணர் சொன்னார் "பார்த்தாயா துரியோதனா ...உன் கண்ணுக்கு எல்லோரும் அயோகியர்களாகத் தெரிகிறார்கள்....தர்மன் கண்ணுக்கு எல்லோரும் நல்லவர்களாத் தெரிகிறார்கள். ...எல்லாம் பார்வையில் இருக்கிறது. நான் என்ன செய்ய " என்றார்.

தர்மன் - சாத்வீகம்.

துரியோதன் - ரஜோ குணம்.

குணங்கள் பார்வையை மாற்றிப் போடுகின்றன.

 சரி, குணங்கள் நம் பார்வையை மாற்றுகின்றன. குணங்களால்  கட்டுண்டு துன்பம் படுகிறோம்.

இந்த குணங்களில் இருந்து எப்படி விடுபடுவது ?

மேலும் சிந்திப்போம்.

அது வரை, உங்களை, உங்களைச் சுற்றியுள்ள உலகை, உங்கள் இன்ப துன்பங்களை எப்படி உங்கள் குணங்கள் பாதிக்கின்றன என்று ஆழ்ந்து சிந்தியுங்கள்.

ஏன் ஒருவரை பிடிக்கிறது ? ஏன் ஒருவரை பிடிக்கவில்லை ? ஏன் சிலவற்றை நினைத்தால் பயமாக இருக்கிறது ? இந்த குணங்கள் எனக்கு எப்படி வந்தது ? எந்த சமயத்தில் எந்த குணம் தலை தூக்கி நிற்கிறது என்று உங்களுக்குள்ளேயே ஒரு ஆராய்ச்சி செய்யுங்கள்.

குணம் என்ற காற்றினில் அலைகழிக்கபடும் துரும்பு அல்ல நீங்கள். எதற்கும் அசையாத மலை நீங்கள் என்று தெரிய வரும்.

கீதை உங்களுக்குத் துணை புரியும்.

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/03/1419.html )

No comments:

Post a Comment