Saturday, March 26, 2016

கீதை - 14.22 - குணங்களின் மேல் விருப்பும் வெறுப்பும்

கீதை - 14.22 - குணங்களின் மேல் விருப்பும் வெறுப்பும் 


श्रीभगवानुवाच
प्रकाशं च प्रवृत्तिं च मोहमेव च पाण्डव ।
न द्वेष्टि संप्रवृत्तानि न निवृत्तानि काङ्क्षति ॥१४- २२॥

ஸ்ரீபகவாநுவாச
ப்ரகாஸம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்டவ |
ந த்வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தாநி ந நிவ்ருத்தாநி காங்க்ஷதி || 14- 22||

ஸ்ரீபகவாந் உவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
ப்ரகாஸம் = ஒளி
ச = மேலும்
ப்ரவ்ருத்திம் = தொழில்
ச = மேலும்
மோஹமேவ = மயக்கம்
ச = மேலும்
பாண்டவ = பாண்டவனே
ந = இல்லை
த்வேஷ்டி = துவேஷம் கொள்வது இல்லை. பகை கொள்வது இல்லை. வெறுப்பது இல்லை
ஸம்ப்ரவ்ருத்தாநி = தோன்றும் போது
ந = இல்லை
நிவ்ருத்தாநி = நீங்கிய போது
காங்க்ஷதி = விரும்புவதும் இல்லை

ஸ்ரீ பகவான் சொல்கிறான், ஒளி ,தொழில், மயக்கம் இவை தோன்றும் போது அவற்றை வெறுப்பதும் இல்லை மேலும் அவை விலகிப் போகும் போது அவற்றை விரும்புவதும் இல்லை. 

முந்தைய ஸ்லோகத்தில் அர்ஜுனன், இந்த குணங்களின் பிடியில் இருந்து எப்படி  தப்புவது ? தப்பியவர்கள் யாராவது இருக்கிறார்களா ? அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று.

கண்ணன் சொல்லத் தொடங்குகிறான்.

இந்த குணங்களை கடந்தவர்கள் ஒளி , தொழில், மயக்கம் இந்த மூன்றும் தோன்றும்போது வெறுக்க மாட்டார்கள், விலகும் போது விரும்ப மாட்டார்கள்.

அது என்ன ஒளி , தொழில் , மயக்கம் ?

ஒளி என்றால் சாத்வீகம்
தொழில் என்றால் ரஜோ குணம்
மயக்கம் என்றால் தமோ குணம்.

அதாவது இந்த மூன்று குணங்களும் தோன்றும் போது வெறுப்பு அடைய மாட்டார்கள். இந்த குணங்கள் மறையும் போது அவற்றிற்காக ஆசைப் பட மாட்டார்கள்.

நாம் ஏன் இந்த குணங்களை தாண்டிப் போக முடியவில்லை என்றால், சாத்வீக குணத்தின் மேல் ஆசை. ரஜோ குணம் தேவை தான் வாழ்க்கைக்கு என்ற ஒரு எண்ணம். அதனால் அது இருந்து விட்டு போகட்டும். இந்த தமோ குணம் வேண்டவே வேண்டாம் என்று அதன் மேல் வெறுப்பு.

எப்படி சாத்வீக குணத்தை அதிகரிப்பது, எப்படி தமோ குணத்தை குறைப்பது என்று நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

அது ஒரு தவறான போக்கு.

மூன்று குணங்கள் மேலும் பற்றும் இருக்கக் கூடாது, வெறுப்பும் இருக்கக் கூடாது.

சாத்வீகம் தலை எடுக்கிறதா ? கவனியுங்கள். அது உங்களில் எப்படி வேலை செய்கிறது என்று.   ஆஹா இது நல்லா இருக்கே, இதுவே இருந்தால் தேவலை போல இருக்கே  என்று அதன் மேல் ஆசைப் படாதீர்கள்.

சக்கரம் சுழலும். சாத்வீகம் போய் மற்ற ஏதோ ஒன்று தலைப்படும். அடடா சாத்வீகம் போய் விட்டதே என்று வருந்தாதீர்கள். அது வேண்டும் என்று ஆசைப் படாதீர்கள். எந்த குணம் தலைப் படுகிறதோ,  அப்போதும் ஒரு சாட்சியைப் போல கவனியுங்கள்.

திரையில் காட்சிகள் ஓடுவது போல ஒன்று மாறி மற்றொன்று வந்து கொண்டே இருக்கும். எதனோடும் உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள்.

இந்த மூன்று குணங்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்று வேண்டும் என்றால் மத்த இரண்டும் கூடவே வரும்.

இது வேண்டும், ஆனால் அது வேண்டாம் என்றால்  முடியாது.

உங்களுக்கு எதுக்கு இந்த குணங்கள் எல்லாம். நீங்கள் இதை எல்லாம் விட மிக மிக  பெரியவர்கள். சிறு பிள்ளைகள் கூழான் கற்கள், பயணச் சீட்டு போன்ற குப்பைகளை பொக்கிஷம் போல சேர்த்து வைத்திருப்பார்கள். நாளாக நாளாக பெரியவர்கள் ஆகும் போது அவை எல்லாம் குப்பைகள் என்று அவர்களே உணர்ந்து அவற்றை தூக்கிப் போட்டு விடுவார்கள்.

அது போல, இதுவரை சேர்த்து வைத்த குப்பைகளை தூர வீசுங்கள். எந்த குணம் எப்போது வந்தால் என்ன. வந்து விட்டுப் போகட்டும். வந்த வழியே அவை போகும்.

வரும்போது வருந்தாதீர்கள், போகும் போது விரும்பாதீர்கள்.

இது முதல் படி.

கீதை உங்களை கை பிடித்து அழைத்துச் செல்லும். தைரியமாக முதல் படியில் காலை வையுங்கள். மேலே போய் விடலாம்.

போகலாமா ?

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/03/1422.html )

No comments:

Post a Comment