Wednesday, May 4, 2016

கீதை - 15.10 - ஞானக் கண்

கீதை - 15.10 - ஞானக் கண் 


उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितम् ।
विमूढा नानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः ॥१५- १०॥

உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஜாநம் வா குணாந்விதம் |
விமூடா நாநு பஸ்யந்தி பஸ்யந்தி ஜ்ஞாந சக்ஷுஷ: || 15- 10||


உத்க்ராமந்தம் =  வெளியே வெளியே செல்லும் போது

ஸ்திதம் =நிலை பெற்றவன்

வ = அல்லது

அபி = அது அன்றியும்

புஞ்ஜாநம் = அனுபவிப்பவன்

வ = அல்லது

குணாந்விதம் = குணங்களை கொண்டவன் , குணங்களை ஆள்பவன்


விமூடா = மூடர்கள்

ந = இல்லை

அநுபஸ்யந்தி = காண்பது

பஸ்யந்தி = காண்கிறார்கள்

 ஜ்ஞாந = ஞான

சக்ஷுஷ= திருஷ்டி உள்ளவர்கள் |


அவன் இருக்கும் போதும், புறப்படும் போதும், குணங்களை சார்ந்து இருக்கும் போதும் அவனை மூடர்கள் காண்பது இல்லை. ஞான த்ரிஷுடி (ஞானக் கண் ) உள்ளவர்களே அவனக் காண்கிறார்கள்.

இது போல யார் சொல்லுவார்கள் ?

நம் வாழ்க்கையின்  போக்கை,நம் வாழ்வின் குறிக்கோளை இந்த ஒரு சுலோகம் மாற்றும் வல்லமை கொண்டது.

எப்படி என்று பார்ப்போம்.


இன்பம் எங்கே இருக்கிறது ?

நாம் அனுபவிக்கும் பொருளில் , அனுபவங்களில் இருக்கிறது.

சுவையான பொருளை உண்டால் இன்பம்.

நல்ல சுகமான பாடலைக் கேட்டால் இன்பம்.

நல்ல நறுமணம் இன்பம்.

இயற்கை காட்சிகள், அழகான பொருள்களை கண்டால் இன்பம்.

மனைவியை, கணவனை,  குழந்தையை அணைத்தால் இன்பம்...

இப்படி ஆயிரம் இன்பங்கள் வெளியே கொட்டிக் கிடக்கிறது.

அவை எல்லாம் வேண்டும் என்று தான் ஆலாய் பறக்கிறோம்.

சற்று நில்லுங்கள்.

இன்பம் வெளியில் உள்ள பொருள்களிலா உள்ளது ?

லட்டு தின்பது இன்பம் தான். எப்போதும் இன்பமா ?

ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து லட்டு தின்று பாருங்கள் ஒரே சமயத்தில்...இன்பமாய் இருக்குமா ? எங்கே போயிற்று அந்த இன்பம்.

சின்ன பிள்ளையாக இருக்கும் போது பம்பரம், கோலி , வளையல், ரிப்பன் என்று சேர்த்து வைத்து மகிழ்ந்தோம். அதே பம்பரமும் ரிப்பனும் இப்போது இன்பம் தருமா ? என்னவாயிற்று அந்த இன்பம் ?


மனைவியின் புன்னகை அழகுதான். இன்பம் தருவதுதான். ஆனால், அலுவலகத்தில் ஏதோ ஒரு சிக்கல். குழப்பம். பெரிய பிரச்சனையில் கொண்டு போய் விடுமோ என்ற பயத்தில் இருக்கும் போது , அதே மனைவியின் புன்னகை மகிழ்ச்சியைத் தருமா ? எங்கே போயிற்று இன்பம்.

காய்ச்சல் வந்து வாய் கசந்தால், எதுவுமே உண்ணப் பிடிப்பது இல்லை. சுவை எங்கே இருக்கிறது ?

இன்பம் என்பது வெளியில் இல்லை என்று புரிகிறது அல்லவா. வெளியில் இருந்தால் அது எப்போதும் நமக்கு இன்பத்தை தந்து கொண்டே இருக்க வேண்டும். இன்பம் நம் மன நிலையைப் பொறுத்து மாறுகிறது.

ஆனால், நாம் என்ன நினைக்கிறோம் என்றால் உணவில், உடையில், இசையில், காட்சியில், தொடுதலில் இன்பம் இருக்கிறது என்று அவற்றின் பின்னால் அலைகிறோம் .

அலைவது மட்டும் அல்ல, இன்பம் என்பதே வெளியில் இருந்து வருவதுதான் என்று ஒன்றை விட்டு மற்றொன்றிக்காக ஓடிக் கொண்டிருக்கிறோம்.

இன்பத்தை அனுபவிக்கும் போது , அந்த இன்பம் அனுபவிக்கும் பொருளில் இருக்கிறது என்று நினைக்கிறோம்.

"அவன் இருக்கும் போதும், புறப்படும் போதும், குணங்களை சார்ந்து இருக்கும் போதும் அவனை மூடர்கள் காண்பது இல்லை. ஞான த்ரிஷுடி (ஞானக் கண் ) உள்ளவர்களே அவனக் காண்கிறார்கள். "


அனுபவிப்பவன் உள்ளே இருக்கிறான் என்று தெரிவது இல்லை. எனக்குள் இருக்கும் நான் தான் இன்பத்திற்கு காரணம் என்று மூடர்களுக்குத் தெரிவது இல்லை. அறிவினால் யோசிக்கும் போது அது புலப் படும். நேரில் பார்த்தால் புரியாது.

அறிவினால் சிந்தித்து அறிய முடியும்.

இன்பமும் துன்பமும் வெளியே இல்லை, உங்களுக்குள் தான் இருக்கிறது.

அதை நீங்கள் காண முடியும் என்றால் உங்கள் வாழ்கையின் போக்கு மாறும்.

இன்பத்தை வெளியே தேடி அலைய மாட்டீர்கள்.

அந்த ஞானம் உங்களுக்கு வர வாழ்த்துக்கள்.


(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/05/1510.html )

No comments:

Post a Comment