Friday, May 6, 2016

கீதை - 15.11 - மனத் தூய்மை

கீதை - 15.11 - மனத் தூய்மை 


यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितम् ।
यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः ॥१५- ११॥

யதந்தோ யோகி³ நஸ்சைநம் பஸ்யந்த்யாத்மந்யவஸ்தி²தம் |
யதந்தோ ப்யக்ருதாத்மாநோ நைநம் பஸ்யந்த்யசேதஸ: || 15- 11|

யதந்தோ = முயற்சிப்பவர்கள்

யோகிந = யோகிகள்

ச = மேலும்

எனம் = அவர்கள்

பஸ்யந்த்தி = காண்கிறார்கள்

ஆத்மானி = தங்களுக்குள்

அவஸ்திதம் = இருக்கும் , நிலை பெற்று இருக்கும்

யதந்தோ = முயற்சி செய்பவர்கள்

அக்ருதாத்மாநோ = தயாராக இல்லாதவர்கள் ,

ந = இல்லை

எனம் = அவனை

பஸ்யந்த் = காண்பது

அசேதஸ: = நினைவு இல்லாதவர்கள், ஸ்மரணை இல்லாதவர்கள்,

முயற்சியுடைய யோகிகள் அவனை தங்களுக்குள்ளே காண்கிறார்கள். முயற்சி செய்தாலும், தயாராக இல்லாதவர்கள் அவனை காண மாட்டார்கள். 


கீதை மட்டும் அல்ல, எந்த வேத புத்தகமும் புதிதாக என்ன சொல்லி விடப் போகிறது என்ற எண்ணம் நிறைய பேருக்கு உண்டு.

"அதானே, இந்த ஆசையை விடு, மற்றவர்களுக்கு உதவி செய், பற்று இல்லாமல் இரு, பக்தி செய்..."

அது தான் தெரியுமே. புதுசா என்ன இருக்கப் போகிறது என்று அலுக்கும் ஒரு கோஷ்டி. எல்லாம் தெரிந்ததாக நினைக்கும் ஆணவம்.

இன்னொரு கோஷ்டி, என்ன புதிதாகச் சொன்னாலும், தங்களுக்குத் தெரிந்த சில சித்தாந்தங்களை அதன் மேல் ஏற்றிக் கூறுவது.

- இது அத்வைதம் தான், இது துவைதம் தான், இது விசிஷ்டாத்வைதம் தான் என்று எதைச் சொன்னாலும் தங்களுக்குத் தெரிந்த தந்துவத்துக்குள் அதை கொண்டு வர முயற்சிப்பது. ஒரு வேளை அது சரியாக வரவில்லை என்றால், புதிய சிந்தனைகளை புறம் தள்ளி விடுவது. அவர்களுக்குத் தெரிந்த, புரிந்த, கோட்பாடுகளுக்குள் எந்த புதிய சிந்தனையும் வந்து விட வேண்டும். அதற்கு வெளியே ஒன்றும் இருக்க முடியாது. இருந்தால் அது தவறு, அல்லது அது மறுக்கப் படும்.  எனக்குத் தெரிந்த உண்மை தான் உண்மை. மற்றவை எல்லாம் உண்மைகள் அல்ல என்ற முரட்டுத்தனம்.

- இன்னும் சில பேர், எதைச் சொன்னாலும் மறுத்துச் சொல்லுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் பேர்வழிகள்.


நாம் எவ்வளவோ புதிய புதிய புத்தகங்களைப் படிக்கிறோம். பெரியவர்கள்  பேசுவதைக் கேட்கிறோம். இருந்தும் மாற்றம் ஒன்றும் இல்லை. அப்படியே தான் இருக்கிறோம். அதே கவலைகள், அதே இன்பங்கள், அதே பயங்கள் , அதே வாழ்கை.

ஏன் நாம் முன்னேறாமல் அப்படியே இருக்கிறோம் ? இத்தனை பெரிய  மகான்கள் சொல்லியதை படித்தும் கேட்டும் உலகம் மாறியதாகத் தெரியவில்லை.

ஏன் ?

அவர்கள் சொன்னது பிழையா ?

இல்லை.

பின் என்ன ஆயிற்று ?

நம் அறிவும், மனமும் சுத்தமாக இல்லை.

தெளிவில்லாத மனதில் , அறிவில் என்னதான் முயற்சி செய்தாலும் உண்மை இறங்குவது இல்லை.

கண்ணாடி அழுக்காக இருந்தால், பிம்பம் தெளிவாகத் தெரிவது இல்லை.

நம் மனதில் ஆயிரம் ஆசைகள், காமங்கள், கோபம், பொறாமை, பயம், சுயநலம்...

இத்தனையும் வைத்துக் கொண்டு நாம் உண்மையைத் தேடுகிறோம்.

கையில் கிடைத்தாலும் புரியாது.

விக்கினேன் வினையுடையேன் என்றார் மணிவாசகர்.

அமிர்தம் கையில் கிடைத்தது. உண்பதற்குள் விக்கல் வந்து விட்டது என்கிறார்.

அது போல, மன அழுக்குகளை நீக்கினால், முயற்சிக்கு பலன் கிடைக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக மனதை சுத்தம் செய்யுங்கள்.

நல்லவை உள்ளே வர வேண்டும் என்றால், குப்பைகளை வெளியே கொண்டு போய் கொட்டுங்கள்.

நல்லது வரும்.


(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/05/1511.html

No comments:

Post a Comment