Monday, August 8, 2016

கீதை - 16.2 தெய்வ சம்பந்தம்

கீதை - 16.2 தெய்வ சம்பந்தம்



अहिंसा सत्यमक्रोधस्त्यागः शान्तिरपैशुनम् ।
दया भूतेष्वलोलुप्त्वं मार्दवं ह्रीरचापलम् ॥१६- २॥

அஹிம்ஸா ஸத்யமக்ரோத ஸ்த்யாக: ஸாந்திரபைஸு²நம் |
த³யா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம் || 16- 2||


அஹிம்ஸா = அஹிம்ஸை

ஸத்யம்ஸ = சத்யம்

அக்ரோத = கோபமின்மை

தியாகம் = தியாகம், துறவு

ஸாந்தி = அமைதி

அபைஸு²நம் = வன்மை , வலு

தயா = தயை

பூதேஷு = புவியில் உள்ள உயிர்களிடம்

அலோலுப்த்வம் = ஆசை இன்மை

மார்தவம் ஹ்ரீ = மென்மை

அரசாபலம் = விடா முயற்சி


அகிம்சை, வாய்மை, கோபம் இல்லாமை, தியாகம்,  அமைதி, வன்மை , உயிர்கள் மேல் தயை , ஆசை இன்மை,  மென்மை, நாணுடைமை, விடா முயற்சி


எந்தெந்த நல்ல  குணங்கள் இருந்தால், அல்லது கெட்ட குணங்கள்  இல்லாவிட்டால் நாம் செய்த சம்பந்தம் பெறுவோம் என்று கீதை பட்டியல் தருகிறது.

அகிம்சை - இம்ஸை செய்யாமல் இருப்பது. இம்சை என்றால் ஏதோ உடல் அளவில் துன்பம் செய்வது மட்டும் அல்ல. ஒரு பார்வையில், ஒரு வார்த்தையில்  மற்றவரின் மனதை துன்பப் படுத்தி விடலாம். மனதாலும்,  வாக்காலும், செயலாலும், செயல் இன்மையாலும் மற்றவர்களுக்குத் துன்பம் தரக் கூடாது.

"நீ எனக்கு அதை வாங்கித் தரா விட்டால் உன்னோடு பேச மாட்டேன், சாப்பிட மாட்டேன்" என்று மனைவி , கணவனிடம் அடம் பிடித்தால் அது கூட ஹிம்சை தான். மனைவி கணவனை அடிக்க வில்லை, சூடான வார்த்தை எதுவும் சொல்ல வில்லை...இருந்தாலும், கணவனின் மனம்  சங்கடப் படுகிறது. அது ஒரு ஹிம்சை.

அதே போல், மனைவி ஒன்று கேட்டு , கணவன் , அது தன்னால் முடிந்தும் வேண்டும் என்றே வாங்கித் தராமல் இருந்தால் அவள் மனம் துன்பப் படும். அதுவும் ஒரு ஹிம்சை தான்.

அகிம்சை என்பது ஏதோ அடி தடி மட்டும் அல்ல. அமைதியாக, பேசாமல், ஒரு பார்வை அசைவில், ஒரு துளி கண்ணீரில் கூட மற்றவர்களை  காய படுத்தி விடலாம்.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்பது உலகப் பொதுமறை.

அப்படி கூட செய்யாமல் இருப்பதுதான் கீதை காட்டும் அகிம்சை.



சத்யம் - உண்மை. எது உண்மையோ அதையே பேசுவது, அதையே கடை பிடிப்பது.  உண்மைக்கு புறம்பாக எதையும் செய்யாமல் இருப்பது.

மெய் பொருளை கண்டு அறிவது.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பார் வள்ளுவர்.

எப்பொருள் எத்தன்மைத்தாயினும் , அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு என்பதும் அவர் வாக்கே.

பொய்யாயினவெல்லாம் போய் அகல வந்தருளி 
மெய் ஞானம் ஆகி நின்று மிளிர்கின்ற மெய் சுடரே என்பார் மணிவாசகர்.

அந்த மெய் ஞானத்தை கண்டு அடைய வேண்டும்.


அக்ரோத - அக்ரோத என்பதற்கு கோபமின்மை என்பது சரியான மொழிபெயர்ப்பு அல்ல. கோபத்தின் கொடுமை இல்லாமல் இருப்பது. குழந்தை சரியாக படிக்கவில்லை என்றால் கோவப் படுவது பெற்றோரின் இயல்பு. அந்தக் கோபம் கூட இல்லை என்றால் அவர்கள் கொண்ட அன்பிற்கும் அர்த்தம் இல்லை என்றாகும். கோபம் இருக்க வேண்டும்.  கோபத்தின் கொடூரம் இருக்கக் கூடாது.


தியாகம் = தியாகம், துறவு ...கீதை மீண்டும் மீண்டும் அறிவுறுத்தும் ஒரு குணம். உலக  இன்பங்களை அனுபவி. ஆனால் அவற்றின் மேல் பற்று வைக்காதே. அது மட்டும் அல்ல, ஒரு குடும்பம் சிறக்க வேண்டும் என்றால் அதில் உள்ள ஒவ்வொருவரும் கொஞ்சம் தியாகம் செய்ய   வேண்டும். ஒரு சமுதாயம் சிறக்க வேண்டும் என்றால்  அதில் உள்ள மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் கொஞ்சம் தியாக செய்யத்தான் வேண்டும்.

வரி கொடுப்பதும் ஒரு தியாகம் தான்.

சட்ட ஒழுங்கை மதித்து நடப்பது நம் சுதந்திரத்தை தியாகம் செய்வது தான்.

ஒரு வீட்டில், ஒரு சமுதாயத்தில், ஒரு நாட்டில் உள்ள அனைவரும் ஒருவருக்கு ஒருவர்  புரிந்து கொண்டு தியாகம் செய்து வாழ்ந்தால் அந்த வீடும், சமுதாயமும், நாடும் அமைதியுடன் , மகிழ்ச்சியுடன் திகழும்.

தனி மனித சுதந்திரம், சுயநலம் என்று போனதால் இன்று நாட்டில் அநேக குழப்பங்கள்.

கீதையை படிக்க வேண்டும். அதன் ஒவ்வொரு வார்த்தையும் உள் வாங்கி அதன் படி   நடந்தால், நாடும் வீடும் அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்து விளங்கும்.

நம்மி முன்னவர்கள் , நாம் நலமுடன் வாழ மிகப் பெரிய பொக்கிஷத்தை விட்டு விட்டு சென்றிருக்கிறார்கள்.

அதை அறியாமல், எங்கெங்கோ அலைந்து கொண்டு இருக்கிறோம்.

கீதையை படிப்போம். நம் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவோம்.

 சுயநலம் துறந்து, நாடும் வீடும் செழிக்க அது தான் வழி.

முயன்றுதான் பார்ப்போமே.

(தொடரும்)

http://bhagavatgita.blogspot.in/2016/08/162.html



No comments:

Post a Comment